

திருப்பூர்,
மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வைக்கப்பட்டு வந்தது. பின்னர் 2-வது கட்டமாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3ஆயிரம், 'கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என ஒரே நேரத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதையறிந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்க பெறாதவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.
அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், தாங்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. எனவே அதற்கான காரணங்கள் என்ன, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டறிந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை விளக்கினர். அவர்களிடம் தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த பெண்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.