அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

பூத் அமைப்பே இல்லாதவர்கள் சித்து விளையாட்டு காட்டுகின்றனர் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுகவின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
2026- ம் ஆண்டு அதிமுகவுக்கானது விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வலுசேர்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 100 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. வருபவர்கள் வரட்டும். இருப்பவர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெறும் வல்லமை பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு உண்டு. நாம் நினைக்கின்ற கூட்டணியை பொதுச் செயலாளர் அமைக்க உள்ளார். பிரச்சினைகள் தீர்ந்து, வெற்றியை நோக்கி நமது கூட்டணி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், எந்த ஐயமும் வேண்டாம் வெற்றி அதிமுகவுக்கு தான்.
அதிமுகவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், “நாங்கள் தான் திமுகவை தோற்கடிக்க கூடியவர்கள், நாங்கள் ஆதரித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், நாங்கள் தான் புதிய வரலாறு” எனக் கூறுபவர்களுக்கு முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பலம் உள்ளதா? பூத் அமைப்பே இல்லாத சிலர் சித்து விளையாட்டு காட்டி வருகின்றனர். உண்மையில் தமிழ்நாடு தேர்தல் களத்தில் போட்டியென்பது அதிமுக மற்றும் திமுக இடையே தான்.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதன் காரணமாக தற்போது ரூ.3 ஆயிரம் அறிவித்து உள்ளனர் அதிமுக ஆட்சி வந்த உடன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






