ரூ.55 லட்சம் கொள்ளை கடை ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் இரும்பு கடையில் ஊழியர்களை தாக்கி ரூ.55 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடை ஊழியர்கள் உள்பட 6 பேரை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ரூ.55 லட்சம் கொள்ளை கடை ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது
Published on

பிராட்வே,

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சலீம்(வயது 66). இவர், சென்னை பாரிமுனை செம்புதாஸ் தெருவில் இந்தியன் ஸ்டீல் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு குழாய்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சிலர் கடையின் மாடியிலேயே தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். கடையின் மேலாளராக தமீம் என்பவர் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மேலாளர் தமீம் தலைமையில் ஊழியர்கள் மகாராஜன்(25), மணிமாறன்(24), மகாலிங்கம்(25), தினேஷ்(24) ஆகியோர் இரும்பு குழாய் விற்றதில் வசூலான பணத்தை எண்ணி, கணக்கு சரிபார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு முகத்தை துணியால் மூடியபடி உள்ளே வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. அதனை தடுக்க முயன்ற ஊழியர் மகாராஜனின் தலையில் கத்தியால் வெட்டிய கொள்ளையர்கள், மற்ற ஊழியர்களையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டனர். பின்னர் அங்கிருந்த ரூ.55 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் வெட்டியதில் மகாராஜன் பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி கடை உரிமையாளருக்கும், எஸ்பிளனேடு போலீசாருக்கும் மேலாளர் தமீம் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த மகாராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஜான் அருமைநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணபிரபு, ஜீலியஸ்சீசர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கொள்ளை நடந்த கடைக்கு அருகில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொள்ளை நடந்த கடையில் வேலை பார்ப்பவர்களில் சிலர்தான் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் வேலை பார்த்த பிராட்வேயை சேர்ந்த மணிமாறனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வாரந்தோறும் சனிக்கிழமையன்று கடையில் இரும்பு குழாய்கள் விற்றதில் வசூலாகும் பணத்தை எண்ணுவது வழக்கம். குறைந்தபட்சம் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக பணம் புழங்குவதால், அவற்றை கொள்ளையடிக்க தன்னுடைய நண்பர்களை சேர்த்துக்கொண்டு 1 மாத காலமாக திட்டமிட்டு வந்தார். அதன்படி நேற்று முன்தினம் மற்றவர்களோடு சேர்ந்து இவரும் பணம் எண்ணும் போது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் மணிமாறன் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மணிமாறனை கைது செய்த தனிப்படை போலீசார், இந்த கொள்ளையில் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த அதே கடையில் வேலை செய்து வந்த மற்றொரு ஊழியரான மூலகொத்தளத்தை சேர்ந்த கார்த்திக், முத்தையால்பேட்டையை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார், ராஜா, சாந்தகுமார், சுப்பிரமணி ஆகிய மேலும் 5 பேரையும் கைது செய்தனர்.

கொள்ளை நடந்த 12 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும் கைதான 6 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார ரீதியாக பணப்புழக்கம் அதிகமுள்ள பாரிமுனை பகுதியில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்குள்ள வியாபாரிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com