

சென்னை,
ஊரகப் பகுதிகளில் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 'தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும். ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும். ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்" என்று அறிவித்தார்
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும் இத்திட்டமானது. சிறப்பான உற்பத்தித் திறன்கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துதல், மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல், அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல், குடும்ப ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும். இதன்மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம். ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட கால சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.