ரூ. 57 ¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

கொள்ளிடம் ஊராட்சியில் ரூ.57 ¾ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
ரூ. 57 ¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

கொள்ளிடம்:

வளர்ச்சி திட்ட பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடவாசல், எடமணல், திருமுல்லைவாசல், மடவாமேடு, வேட்டங்குடி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடவாசலில் தோட்டக்கலை துறையின் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 அரசு மானியத்தில் பசுமை குடிலில் வெள்ளரி பயிரிடப்பட்டுள்ளதையும், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேலப்பாளையம் வடிகால் வாய்க்காலில் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு பணியின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.

பின்னர், எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மயான பாதையில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளதையும், திருமுல்லைவாசலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தூக்கணாங்குருவி வாய்க்கால் 5 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

அலையாத்தி காடுகள்

தொடர்ந்து, வேட்டங்குடி கிராமத்தில் 1000 பனைவிதைகள் விதைக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் காய்கறி தள்ளுவண்டி வாகனத்தை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மடவாமேடு கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அலையாத்தி காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 50 எக்டேர் பரப்பளவிற்கு அலையாத்தி செடிகள் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வன அலுவலர் அபிநத்தோமர், வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குனர் சேகர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பரிமேல்அழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருள்மொழி ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளாசெல்வராஜ் , பரிமளா தமிழ்ச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன், ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், தாரா மற்றும் பலர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com