காவலர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.58.59 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காவல் துறையினருக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.58.59 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி, வாகன சோதனை, கொரோனா நோய்த்தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலர் கொடோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com