உள்ளாட்சி துறைக்கு ரூ.6,374 கோடி மானிய தொகை வழங்க வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

தமிழக உள்ளாட்சி துறைக்கு ரூ.6,374 கோடி மானிய தொகை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமனிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சி துறைக்கு ரூ.6,374 கோடி மானிய தொகை வழங்க வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
Published on

புதுடெல்லி,

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை வழங்கினார்.

இதேபோல மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரையும் சந்தித்து அமைச்சர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு வழங்க வேண்டியது ரூ.2,939 கோடி ஆகும். இதில் 2-வது தவணைத்தொகையாக தொழிலாளர் ஊதியம், கட்டுமானம் மற்றும் நிர்வாக செலவினம் ஆகியவற்றுக்காக அளிக்க வேண்டிய ரூ.609 கோடியே 18 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழக உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி துறைக்கு வழங்க வேண்டிய செயலாக்க மானியம் ரூ.2,029.22 கோடி மற்றும் அடிப்படை செயலாக்க மானியம் ரூ.4,345.47 கோடி என மொத்தம் ரூ.6,374.69 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, நிதி மந்திரியிடம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரியை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் இருந்து டெல்லிக்கு காலைநேர விமான சேவை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com