ரூ.700 கோடி.! சென்னையில் 70 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரூ.700 கோடி.! சென்னையில் 70 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
Published on: 

சென்னை,

சென்னை மாதவரத்தில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மாதவரம் மேம்பால பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஐஸ்கிரீம் வண்டியை போலீசார் கண்காணித்தனர். அந்த வண்டியை ஓட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.

கைது

இதைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் அப்துல் ஷூக்கூர் மற்றும் ஷபிக் அகமது என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

போதைப்பொருள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கடத்தல் தொடர்பாக வாகனத்தில் இருந்த அப்துல் ஷுக்கூர் மற்றும் ஷபிக் அகமது ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தென் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் போதைப்பொருளைத் தங்களிடம் கொடுத்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லச் சொன்னதாகப் பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ.700 கோடி

ஹெராயின் போதைப்பொருளை பொறுத்தவரையில் அதன் மதிப்பு தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.2 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை இருக்கும் என்றும் தற்போது பிடிப்பட்டுள்ள ஹெராயின் மதிப்பு ரூ.10 கோடி எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் போலீசார் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X