

சென்னை,
சென்னை மாதவரத்தில் இருந்து 'ஹெராயின்' போதைப்பொருள் அதிகளவில் கடத்தி வரப்படுவதாகவும், அந்த போதைப்பொருள் ஐஸ்கிரீம் வண்டி மூலம் எடுத்து வரப்படுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்தனர்.
இந்த நிலையில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த ஐஸ்கிரீம் வண்டியை அதிகாரிகள் மடக்கி சோதனை போட்டார்கள். அந்த வண்டியில் இருந்த ஐஸ் பெட்டிக்குள் மேல் பகுதியில் ஐஸ்கீரிம்களை வைத்து அதற்கு கீழே ஹெராயின் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ஐஸ்கிரீம் வண்டியில் மொத்தம் 70 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ஐஸ்கிரீம் வண்டியை ஓட்டி வந்த அப்துல் ஷூக்கூர். சபீர் அகமது ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இருவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 'ஹெராயின்' போதைப் பொருள் அதன் தரத்துக்கு ஏற்பதான் மதிப்பீடு செய்யப்படும். பொதுவாக ஹெராயின் போதைப் பொருள் தற் போதைய சர்வதேச சந்தையில் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.2 கோடி முதல் அதிகபட்சம் ரூ.10 கோடி வரை விற்கப்படுகிறது. தற்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.140 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கைதான 2 பேரும் விசாரணைக்கு பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து கைதானவர் கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை வளையத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விரிவுபடுத்தி உள்ளனர் எனவே இந்த வழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஐஸ்கிரீம் வியாபாரிக்கு தொடர்பு எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சி வழியாக இலங்கைக்கு ஹெராயினை கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஐஸ்கிரீம் வியாபாரியான தேனியைச் சேர்ந்த அப்துல் சுக்கூருக்கு மருத்துவச் செலவுக்காக அப்துல் ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவிய கடத்தல் கும்பல், பின்னர் அவரைக் கடத்தல் பணியில் ஈடுபடுத்தியதும் கடத்தலுக்காக அப்துல் சுக்கூருக்கு ரூ.3 லட்சம் வழங்கப் பேரம் பேசப்பட்டதாகக் விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.