

சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கிறேன் என்று பாதி பேருக்கு வழங்காமல் ஏமாற்றியதோடு, "ஓசி, ஓசி" என்று இழிவுபடுத்திய திமுகவினர், தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ₹8,000 கூப்பன் மாதிரியை வைத்து, அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி, திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரையே பறித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தனக்கு ஏன் கூப்பன் மாதிரியை வழங்கவில்லை என்று கேட்டதற்காக ஒரு பட்டியலினப் பெண்ணை ஆபாசமாகப் பேசி தாக்கியதோடு, தற்கொலை புரியத் தூண்டியிருப்பது தான் திமுகவின் சமூக நீதியா? இது தான் பெண்களை முன்னேற்றும் லட்சணமா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே?
பெண்களின் பாதுகாப்பைத் துச்சமெனத் தூக்கியெறிந்து, ஆளும் அகங்காரத்தில் அனுதினமும் நம் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்தும் இந்தத் திமுக, இனி என்றும் ஆட்சி அரியணையில் அமரக்கூடாது! "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களைக் கொல்லும் திமுகவை விரட்டியடிப்போம்! தமிழகப் பெண்களைக் காப்போம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.