

சென்னை,
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர அரசியல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கி வருவதாக அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் அதுதொடர்பாக புகார் அளித்துள்ளது.
அ.தி.மு.க. மாநில வழக்கறிஞரணி துணை செயலாளரான ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு, மதியழகன் போட்டியிடும் பர்கூர் மற்றும் செந்தில் குமார் போட்டியிடும் பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கி வருவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறலாகும்.
தி.மு.க.வினர் தேர்தலில் குறுக்கு வழியில் வாக்குகளை பெறும் நோக்கில், தேர்தலுக்கு முன்பாகவே ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சீரியல் நம்பர்களுடன் வாக்காளர்களுக்கு டோக்கன்களாக வழங்கி வருவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டவிரோதமானதாகும்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, இதுவரை வழங்கப்பட்ட கூப்பன்களை பறிமுதல் செய்து நேர்மையாக தேர்தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், தேர்தல் ஆணையம் வழங்கிய அந்த சான்றிதழ், மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக வழங்கப்பட்டதாகவும், அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு பயன்படுத்துவதற்கு இது பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.