ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி ரூ.85 லட்சம் மோசடி

ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மோசடி
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அடுத்த ஒத்திப்போட்டு வல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (35 வயது). இவர் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். பின்னர் அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் ரூ.85 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவரது வங்கி கணக்கில் எவ்வித இரட்டிப்பு பணமும் வராததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் செலுத்திய பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. பின்னர்தான் மர்மநபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்தார்.

இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் போலியான கம்பெனி பெயரில் புதிதாக வங்கி கணக்கை உருவாக்கி அதில் ரூ.10 லட்சத்தை வரவு வைத்து அதன் மூலம் மோசடி நபர்களுக்கு உதவியதாக திருவொற்றியூர், ராஜாஜி நகர், அண்ணா தெருவை சேர்ந்த உதயன் (37 வயது) மற்றும் தரகராக செயல்பட்ட கொடுங்கையூர், அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபாகரன் (39 வயது) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com