

சென்னை,
தனியார் சட்டக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை சாந்தி (வயது 45). இவர் மீது சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த திவ்யா உள்பட 17 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்மனு அளித்தனர். அதில், ரெயில்வே மற்றும் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சாந்தி ரூ.88 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர்சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பேராசிரியை சாந்தி மோசடியில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தது.
கைது
அதன்பேரில் சாந்தி கைது செய்யப்பட்டார். மோசடியில் சாந்திக்கு துணை புரிந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பக்தவச்சலம் (43) என்பவரும் கைதானார். மோசடி பணத்தில் சாந்தி தங்க நகைகள் வாங்கியது தெரியவந்தது. அந்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.