

தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள சுந்தர்நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 52).இவர் கோவில்பட்டி கிழக்கு நகர்புற மின் வாரியத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதியன்று கோவில்பட்டியில் இருந்து முத்தையாபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் சிப்காட் பகுதியில் சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சண்முகநாதனின் மனைவி ஏற்கனவே இறந்த நிலையில், அவரது மகன் சுபஸ்ரீ மற்றும் சண்முகநாதனின் தாய் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞர் வீ.ரவீந்திரன் மூலம் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாவட்ட நீதிபதி சுபா தேவி விசாரித்தார்.
விசாரணை முடிவில், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீடு நிறுவனம் 91 லட்சத்து 72 ஆயிரத்து 64 ரூபாய் மற்றும் மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 7.5% வட்டி மற்றும் செலவு தொகை சேர்த்து வழங்க வேண்டும் என நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டார்.