வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.91 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.91 லட்சம் மோசடி
Published on

கடலூர் மாவட்டம் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சைலேஷ் (வயது 31). இவர், முகநூலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகினார்.

அங்கு ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சையத் மின்ஹாஜுதீன் (40) உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள் சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்தை கேட்டனர். அதன்படி சைலேஷ் கடந்த ஆண்டு ரூ.3 லட்சத்தை கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் சைலேஷ், நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் கந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

இந்த மோசடி தொடர்பாக நேற்று சையத் மின்ஹாஜுதீனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு மேற்படி நிறுவனத்தை நடத்தியதும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்களிடம் ரூ.91 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைதான சையத் மின்ஹாஜுதீனை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com