செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி

தேனியில் செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி
Published on

ராஜஸ்தான் வாலிபர்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்சிங் (வயது 37). இவர் தேனியில் செல்போன் உதிரிபாகங்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடை வைத்துள்ளார். அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே ஹார்னியான் பகுதியை சேர்ந்த சேட்டாராம் மகன் தூதாராம் (21) என்பவர் எனது கடையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அவர் ரூ.3 லட்சம் என்னிடம் முன்பணமாக பெற்றுக் கொண்டு கடையில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

பார்கோடு மாற்றம்

கடந்த பிப்ரவரி மாதம் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நான் ராஜஸ்தான் சென்று விட்டேன். மே மாதம் திரும்பி வந்தேன். கடையில் பண பரிவர்த்தனைக்காக வங்கிக் கணக்கின் பார்கோடு வைத்திருந்தேன். நான் ஊருக்கு சென்றிருந்த காலக்கட்டத்தில், பரிவர்த்தனைக்காக வைத்து இருந்த பார்கோடை தூதாராம் அகற்றிவிட்டு, தன்னுடைய வங்கிக் கணக்கின் பார்கோடு விவரங்களை வைத்து பரிவர்த்தனை செய்துள்ளார். அந்த வகையில் ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 500 மற்றும் கடையில் பல தேதிகளில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 500 மோசடியாக எடுத்துக் கொண்டார்.

நான் கடைக்கு திரும்பி வருவதற்குள், அவர் ராஜஸ்தானுக்கு சென்று விட்டார். அதன்பிறகு தான் அவர் இந்த மோசடியில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தானுக்கு சென்றுவிட்ட தூதாராமை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தினார்.

அதில் முன்பணம் ரூ.3 லட்சம் மற்றும் கடையில் இருந்து எடுத்த தொகை உள்பட ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 500 மோசடி செய்து விட்டதாக தூதாராம் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தூதாராமை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com