வாட்ஸ்அப் மூலம் ரூ.1.90 கோடி மோசடி: டெல்லியில் என்ஜினீயர் கைது

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன நிதி மேலாளர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு, நிறுவன நிர்வாக இயக்குனர் அனுப்புவது போல் குறுச்செய்தி ஒன்று வந்தது.
டெல்லியில் என்ஜினீயர் கைது.
Published on: 

சென்னை,

நிறுவன அதிகாரி போல் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி ரூ.1.90 கோடி மோசடி செய்த என்ஜினீயரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.

ரூ.1.90 கோடி மோசடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 67). இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு, நிறுவன நிர்வாக இயக்குனர் அனுப்புவது போல் கடந்த ஆகஸ்டு 13-ந் தேதி குறுஞ்செய்தி வந்தது. அதில், மென்பொருள் உருவாக்கப் பணிக்காக ரூ.1 கோடியே 90 லட்சம் அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய சவுந்தர்ராஜன், அந்தப் பணத்தை ஆர்.டி.ஜி.எஸ். மூலம் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். பின்னர் நிர்வாக இயக்குனரிடம் தெரிவித்தபோது, தான் பணம் அனுப்ப கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

என்ஜினீயர் கைது

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சவுந்தர்ராஜன் ஆவடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், குஜராத் மாநிலம் காந்திநகரைச் சேர்ந்த தீபக் மீனா(27) என்பவரை டெல்லியில் கைது செய்தனர். இவர் கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் பி.டெக். கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார். கூட்டாளிகளுடன் சேர்ந்து 'பாஸ் ஸ்கேம்' முறையில் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன், மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com