ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது

ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது
Published on

சென்னை,

டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டு படையினருக்கு உளவு தகவல் தெரிய வந்தது. 4 மாதங்களாக நடந்த தொடர் விசாரணையில், டெல்லியில் இருந்து மீண்டும் இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற உள்ளது என தெரிய வந்தது.

இதுபற்றி கடந்த பிப்ரவரி இறுதியில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போதை பொருட்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, நடந்த அதிரடி விசாரணையில், மேற்கு டெல்லியின் பசாய் தாராப்பூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவர்களை விசாரித்தனர். அந்த குடோனில் இருந்த கும்பல், சூடோஎபிடிரைன் என்ற போதை பொருளை கடத்தலுக்கு பயன்படுத்த தயாராக இருந்தது.

அந்த கும்பல், உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்துமாவில் அவற்றை கலந்து கொண்டு இருந்தது. இவற்றை பாக்கெட்டுகளாக அடைத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடந்த விசாரணையில், 3 பேரும் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்று 45 முறை போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை, ரூ.2 ஆயிரம் கோடி சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட 3,500 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளன.

சூடோஎபிடிரைன் என்ற இந்த ரசாயன பொருளானது மெத்தம்பெடமைன் என்ற போதை பொருளை உருவாக்க பயன்படும் முக்கிய ரசாயன பொருளாகும். மெத் அல்லது கிறிஸ்டல் மெத் என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் அதிகம் தேவைப்படும் ஒன்றாக உள்ள இந்த போதை பொருள் 1 கிலோ ரூ.1.5 கோடி வரை விற்பனையாக கூடியது.

இந்த 3 பேர் கும்பலை பின்புலத்தில் இருந்து இயக்கியவர் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் விசாரணையின் முடிவில், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அரசியல் பிரமுகரான அவருக்கு, டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதனால், சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். அவருடைய வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com