ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், சிறப்பு உணவு தொகுப்பு வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தினக்கூலிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், சிறப்பு உணவு தொகுப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், சிறப்பு உணவு தொகுப்பு வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க முதல்-அமைச்சராக நான் இருந்தபொழுது, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் போலீஸ் கமிஷனரும், பிற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் ஆதரவோடு நோய் தோற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் தினக் கூலிகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதார சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு அ.தி.மு.க. அரசு பல்வேறு விலையில்லா உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க நிவாரண நிதி போன்றவைகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.

தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைகிறார்கள். அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியது போல், உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com