சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: இல்லத்தரசிகள் வரவேற்பு

சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று பெண்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: இல்லத்தரசிகள் வரவேற்பு
Published on

சென்னை,

பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக்கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகையை கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர். இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கு மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சென்னையில் ரூ.1118.50 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.918.50 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 915 ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் விலையேறிக்கொண்டே சென்ற நிலையில் 1 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் சென்று ரூ.918 ஆக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com