ரூ.3 ஆயிரத்துக்கு செல்போன், தங்க நாணயம் தருவதாக நூதன மோசடி: மாணவருக்கு பார்சலில் வந்த காய்கறி வெட்டும் எந்திரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இழந்த பணம் கிடைத்தது

ரூ.3 ஆயிரத்துக்கு செல்போன், தங்க நாணயம் தருவதாக கூறி மாணவருக்கு காய்கறி வெட்டும் எந்திரத்தை பார்சலில் அனுப்பி நூதன மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், இழந்த பணம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
ரூ.3 ஆயிரத்துக்கு செல்போன், தங்க நாணயம் தருவதாக நூதன மோசடி: மாணவருக்கு பார்சலில் வந்த காய்கறி வெட்டும் எந்திரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இழந்த பணம் கிடைத்தது
Published on

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் புது பல்லக்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 18). இவர் டிப்ளமோ படித்துக்கொண்டே, பகுதி நேர வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் கடந்த மாதம் முத்துராமனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் சென்னையில் மிகப்பெரிய ஷோரூம் தொடங்கி இருக்கிறோம். இதற்காக நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் 12 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக நீங்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். எனவே ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஒரு எலக்ட்ரானிக் சாதனம் மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் ஆகியவை உங்களுக்கு பரிசாக கிடைக்கவுள்ளது. இதற்கு நீங்கள் வெறும் ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறினார்.

இதையடுத்து மேற்கண்ட 3 பொருட்களையும் தனக்கு அனுப்பிவைக்குமாறு முத்துராமன் கேட்டுள்ளார். அதற்கான பணத்தையும் ஆன்-லைனில் செலுத்தியிருக்கிறார். அடுத்த 4 நாட்களில் முத்துராமனுக்கு ஒரு பார்சல் வந்தது.

அந்த பார்சலில் காய்கறி வெட்டும் எந்திரம் மட்டுமே இருந்தது. அதுவும் உடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து குறிப்பிட்ட செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, சரியாக பதில் அளிக்கவில்லை.

பார்சலில் வந்த காய்கறி வெட்டும் எந்திரத்தை காட்டியபடி தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை ஒரு வீடியோவாக தயாரித்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் முத்துராமன் பதிவிட்டார். இந்த வீடியோ வேகமாக பரவியது.

இந்த வீடியோ வெளியான 3 நாட்களில் ஏராளமானோர் முத்துராமனை தொடர்புகொண்டு தங்களுக்கும் இதே ஏமாற்றம் நிகழ்ந்ததாக கூறியிருக்கின்றனர். இதையடுத்து இந்த விஷயத்தை யாரும் சும்மா விட வேண்டாம். போலீஸ் கவனத்துக்கு எடுத்து செல்வோம், என்றும் கூறி மீண்டும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியான ஓரிரு நாளில் முத்துராமனின் வங்கி கணக்குக்கு அவர் இழந்த ரூ.3 ஆயிரம் கிடைத்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த முத்துராமனுக்கு தன்னிடம் புகார் செய்த அத்தனை பேருக்கும் போன் செய்து தகவலை கூறியிருக்கிறார். விலையுயர்ந்த செல்போனுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்தவர்களும் தனக்கும் பணம் திரும்ப கிடைத்துவிடாதா?, என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com