

சென்னை,
தமிழகத்தில் புதிய அகல ரெயில் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளில், சுமார் ரூ.4 கோடி வரை ஊழல் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், தெற்கு ரெயில்வேயின் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் 2 பேர் உள்பட மேலும் சில நபர்கள் மீது சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
முன்னதாக மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான்-மேலமருதூர் பிரிவில் 17.75 கி.மீ. நீளத்தில் புதிய அகல இருப்புப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ரெயில்வே வாரியம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.120.70 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த கட்டுமானப் பணிகளில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முதல் வழக்கில், ரெயில்வே வாரியம் இந்த வழித்தடத்தில் ஒரு பாலத்திற்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருந்த நிலையில், 2 சிறிய பாலங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
அந்த 2 பாலங்களின் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம், உரிய முன் அனுமதிகளைப் பெறாமல், சின்னா ரெட்டி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 2016 அக்டோபர் 3-ந்தேதி வழங்கப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த பாலங்கள் 2017, ஜூலை 10-ந்தேதி ரூ.3.59 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஒரே நீர்வழியில் 2 பாலங்களும் சுமார் 30 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை இணைத்து கட்டியிருக்க முடியும் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும், பாலங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 4 மீட்டர் உயரமாகக் கட்டப்பட்டதால், மண் வேலைகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செலவுகள் அதிகரித்து, அதன் விளைவாக ரெயில்வே வாரியத்திற்கு ரூ.2.57 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ம் ஆட்ண்டு மே 24-ந்தேதி, சட்டவிரோத கட்டுமானத்தை நியாயப்படுத்தும் முயற்சியாக, சம்பந்தப்பட்ட 2 பாலங்களுக்கும் ஒப்புதல் கோரும் முன்மொழிவு தொடங்கப்பட்டது என்று முதல் தகவல் அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கையில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ரெயில்வே பொறியாளர் முகமது சாலய்யா, சின்னா ரெட்டி ஆகியோரின் பெயர்களை குற்றவாளிகளாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது வழக்கில் முகமது சாலைய்யா மற்றும் மற்றொரு பொறியாளர் வில்லியம் ஜெய் ஆகியோரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த 2-வது வழக்கில், முகமது சாலைய்யா மற்றும் வில்லியம் ஜெய் ஆகிய 2 பொறியாளர்களும் 2016-17ம் ஆண்டில் மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து, ரெயில்வேயின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டுமானத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலங்கள் கட்டப்பட்ட பின்னரே சுவர் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், முதலில் சுவர் கட்டப்பட்டதால், பாலங்களின் அணுகுசாலைகளில் மண் வேலை செய்வதற்குப் போதுமான இடம் இல்லாமல் போனதாகவும், இதன் விளைவாக சுவர் மண்ணில் புதைந்து, ரெயில்வே வாரியத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம், இந்த சி.பி.ஐ. பதிவு செய்துள்ள 2 வழக்குகளிலும் ரெயில்வே வாரியத்திற்கு சுமார் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக 2 ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.