தமிழக காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.
முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் லஞ்சம், ஊழலைத் தடுக்கும் நடவடிக்கையாக, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றாட செலவின நிதியை உயர்த்தி ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

காவல்துறை

தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கத்தினை, தமிழ்நாடு காவல்துறை திறம்பட நிறைவேற்றுவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது.

காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துவரும் சூழலில், அதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற்கொண்டு, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களைவதுடன், இச்செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகைசெய்யும்.

எதிர்பாராச் செலவு நிதி

இந்நிலையில், லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல்துறையில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிகையின் போது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு

உயர்வு

நிதி, முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com