ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு: 318 போலிப்பட்டியல் வணிகர்கள் சிக்கினர் - வணிகவரித்துறை அதிரடி


ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு: 318 போலிப்பட்டியல் வணிகர்கள் சிக்கினர் - வணிகவரித்துறை அதிரடி
x

கோப்புப்படம் 

318 போலிப்பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் 318 போலிப்பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு போலிப்பட்டியல் வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மாதாந்திர இணை ஆணையர்கள் அளவிளான ஆய்வுக்கூட்டங்களில் நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, போலிப்பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தியதின்பேரில், 14.03.2024 மற்றும் 02.07.2024 ஆகிய தேதிகளில் வணிகவரி ஆணையரின் உத்தரவின்படி முதல் மற்றும் இரண்டாவது மாநில அளவிலான தீடீர் செயலாக்க நடவடிக்கைகள் (Enforcement Operations) மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த 12-ந்தேதி மூன்றாம் முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சீரியமுறையில் திட்டமிடப்பட்ட திடீர் செயலாக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 318 போலிப்பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கிவரும் மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை சென்னை-2 நுண்ணறிவுக் கோட்டப் பிரிவினர் ஆய்வு செய்து, ரூ.12.46 கோடி அளவில் உள்ளீட்டு வரி போலியாக துய்த்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்து, அதன் உரிமையாளர் ஜெயபரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story