கோவை, ஈரோடு, சேலம் அடங்கிய மேற்கு மண்டலத்தில் போக்சோ வழக்குகள் 39 சதவீதம் உயர்வு

கோவை, ஈரோடு, சேலம் அடங்கிய மேற்கு மண்டலத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கோவை, ஈரோடு, சேலம் அடங்கிய மேற்கு மண்டலத்தில் போக்சோ வழக்குகள் 39 சதவீதம் உயர்வு
Published on

கோவை

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் போலீஸ் மண்டலத்தில் கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களையும், கோயம்புத்தூர் நகரம், திருப்பூர் நகரம் மற்றும் சேலம் நகரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. போலீசார் 2019 ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 425 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். அதே நேரத்தில் 2018ஆம் ஆண்டில் 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் பெரியய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மேற்கு மண்டலத்தில் 2019 ல் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளின் எண்ணிக்கையில் ஓரளவு குறைந்து உள்ளது. 2018 ல் 254 ஆக இருந்த வழக்குகள் இந்த ஆண்டு 252 ஆக குறைந்துள்ளது. மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு 5 சதவீதம் குறைந்து 1,244 வழக்குகளாக உள்ளன.

2018 உடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன.பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2019 ல் 6 சதவீதம் குறைந்து உள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 2019 இல் 830 ஆக குறைந்து உள்ளது.

2019 ல் குற்றம் சாட்டப்பட்ட 225 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது.

மேற்கு மண்டலத்தில் 2019 இல் 81 கொலை வழக்குகளில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது., 2018 ஆம் ஆண்டில் 52 வழக்குகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க தண்டனை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆகும். கோவையில் துடியலூரில் ஏழு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒன்பது மாதங்களில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது.

போக்சோ வழக்குகளின் கீழ் 2019 ஆம் ஆண்டில் 61 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 53 ஆக இருந்தது.

சாலை விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 2,051 பேர் பலியாகி உள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இது எண்ணிக்கை 2,783 ஆக இருந்தது, இதனால் 2019 இல் 26.3 சதவீதம் குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டில் 12,554 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் 2019 இல் 13 சதவீதம் குறைந்து உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக வாகன ஓட்டிகள் மீது 2019 ஆம் ஆண்டில் 83 சதவீதம் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 2018ல் 11.30 லட்சம் வழக்குகளாக இருந்தது. இது 2019-ல் 20.67 லட்சம் வழக்குகளாக குறைந்து உள்ளது. இதேபோல், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையும் 2019 ல் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com