அரியலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

அரியலூரில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
Published on

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 47 இடங்களில் நிபந்தனைகளுக்குட்பட்டு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 12 கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி அரியலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் குறிப்பிட்ட வழித்தடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது. அரியலூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடப்பதால் நேற்று காலை முதல் நகர பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

மிடுக்குடன் அணிவகுப்பு

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார் மற்றும் வேன்களில் வந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரியலூர் ஒற்றுமை திடலில் திரண்டனர். மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தென்மண்டல செயற்குழு உறுப்பினர் ஆனந்த ரகுநாதன் தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. இதில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பா.ஜனதா மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளை சட்டை, காக்கி பேண்ட், தொப்பி அணிந்த சேவகர்கள் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர். அப்போது பாரதமாதா வேடமணிந்த பெண் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் ஊர்வலத்தின் போது ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த ஊர்வலம் ஒற்றுமை திடலில் தொடங்கி அரியலூர் பஸ் நிலையம் வழியாக சென்று நிறைவடைந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பேசினார்கள்.

பாதுகாப்பு

ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரதான சாலையில் ஊர்வலம் நடைபெற்றதால் அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஊர்வல பாதையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. வீதிகள் அனைத்தும் தடுப்பு கட்டைகள் அமைத்து மூடப்பட்டன. மேலும் உயரமான கட்டிடங்களில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com