

குமரி,
குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் சார்ந்த உற்பத்தி பொருளான ரப்பரின் விலை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில் முக்கிய ரப்பர் உற்பத்தி மாநிலமான கேரளத்திலும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் செப்டம்பர் மாதம் இயல்புக்கு மாறாக கடும் வெயில் நிலவி வருகிறது.
இதனால் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைவாக உள்ளது. இதில் குறிப்பாக மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தால் ரப்பர் பால் உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில் பால் உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இயற்கை ரப்பர் விலை குவின்டாலுக்கு (100 கிலோ) ரூ.4,000 உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நம் நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ரப்பர் கேரளத்தில் விளைவிக்கப்பட்டாலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், 28,000 ஹெக்டேரில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய தாலுகாக்களில் சாகுபடி செய்யப்படுகி றது.
வழக்கமாக ரப்பர், குவின்டால் ரூ.17,000 ரூ.18,000-க்கு விற்பனையாகும். மழை அதிகம் பெய்யும் அக்., நவ., மாதங்களில் மரங்களில் ரப்பர் பால் வடிவது குறைவாக இருக்கும். அதனால் மழை க்காலங்களில் வழக்கத் தைவிட விலை உயர்ந்து குவின்டால் ரூ.24,000 வரை விற்பனையாகும்.
ஆனால், இந்த முறை ரூ.27,000 முதல் ரூ30,000 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்த ரப்பரின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. மழை முடியும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.