

இட்டமொழி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினார்.
தொடர்ந்து மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு லெத்திக்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமையும் இடத்தையும், 2-வது வார்டு நாகல்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாளையங்கோட்டை கிழக்கு வட்டாரம் நடுவக்குறிச்சி பஞ்சாயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பர்கிட்மா நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து தலைவர் பார்வதி மோகன், செயல் அலுவலர் நடராஜன், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.