

சென்னை,
சென்னை செங்குன்றம் அருகே உள்ள நாரவாரிகுப்பத்தில் ராஜப்பா, ஜெயலட்சுமி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் அமைக்க 3 மாடி கட்டிடம் கட்டினர். இந்த கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளது என்று கூறி அந்த கட்டிடத்தை இடிக்க நாரவாரிகுப்பம் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராஜப்பா, ஜெயலட்சுமி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இடிக்க வேண்டும்
ஆக்கிரமிப்பு என்பது புற்றுநோயைப் போன்றது. இதை அனுமதித்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக பொது இடங்களில் எல்லாம் ஆக்கிரமித்து, சுவாசிக்க முடியாத நிலைக்கு நம்மை தள்ளிவிடும். மனுதாரர் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியுள்ளார். இந்த விதிமீறல்களை வரன்முறை செய்ய அனுமதிக்கேட்டு, நகரமைப்பு சட்டத்தின் கீழ் விண்ணப்பமும் செய்துள்ளார். ஒட்டுமொத்த கட்டிடமும் விதிமீறல் என்பதால், அவை ஏற்கப்படவில்லை. அந்த கட்டிடத்தை இடிக்க பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த விதிமீறல் கட்டிடத்தை ஒருமாதத்தில் இடிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அந்த நடவடிக்கையை எடுக்கமாட்டார்கள். ஒருவேளை 30 நாட்களுக்குள் இந்த விதிமீறல் கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிக்காவிட்டால், அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இந்த கட்டிடத்தை இடிக்க தகுந்த பாதுகாப்பை போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
அதேநேரம், விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்வதை தமிழக அரசு தவிர்க்கவேண்டும். அதற்கு பதில், அந்த கட்டிடத்தை இடித்து தள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, பொதுஇடங்கள், பாதைகள், பூங்காக்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது கருத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.