பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்பட நெய்யா? தமிழக அரசு விளக்கம்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்பட நெய்யா? தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதல்-மந்திரி  சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே தர்மத்திற்கு எதிரான செயல்பாடுகள் நாயுடு ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகள் போடுவதையே முதன்மையாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஜூலை 12 சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடு தான் முதல்-மந்திரியாக இருந்தார். ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என்று ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி அளித்தார். 

முன்னதாக  திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர் சந்திப்பில் அளித்திருந்த விளக்கத்தில் 'லட்டுவின் தரத்தை ஆய்வு செய்ய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்திரவிட்டிருக்கிறார். லட்டுக்கான நெய் சப்ளையர்களை அழைத்து எச்சரித்தோம். அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் லட்டுக்கான நெய் பரிசோதனை செய்யப்பட்டது. ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் நான்கு லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது உண்மைதான் என தெரிந்தது' என தெரிவித்தார்.

அதேநேரம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா இந்த ஆய்வினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லட்டு விவகாரம் ஒருபுறம் பூதாகரமாகி வரும் நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பை கலந்து விற்ற திண்டுக்கல் நிறுவனம் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்வதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்துதான்  பெறப்படுகிறது. வதந்தியை பரப்பாதீர்கள் என்று தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com