குலதெய்வ வழிபாடு குறித்து கவர்னர் பேசியதாக பரவும் தகவல்கள் தவறானவை - கவர்னர் மாளிகை விளக்கம்

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக பரவும் தகவல்கள் தவறானவை என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான்; சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் தகவல்கள் தவறானவை என்றும் கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது,

"குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்!" தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்! - கவர்னர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை கவர்னர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.

இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கவர்னர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com