

அரசு தேர்வுத்துறை சார்பில் ஊரக பகுதி மாணவர்களுக்காக ஊரக திறனாய்வுத்தேர்வு (TRUST) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 17-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஊரக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத தகுதியுடையவர் ஆவர். ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் தேர்வில் வெற்றி பெறுவர்களுக்கு 12-ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
67 பேர் எழுதவில்லை
அதன்படி இந்த ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 2766 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் பண்ருட்டி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
இதற்காக மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 9 மணி முதலே வர தொடங்கினர். பின்னர் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இத்தேர்வை 2,699 மாணவ-மாணவிகள் எழுதினர். 67 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.