

சென்னை,
ஊரக தொழில் கடன் விவசாயிகளுக்கு வழங்க ரூ.5,000 கோடி இலக்கு என்று கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த புதிய திட்டத்தினை பயன்படுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு எண் 2-ன்படி, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் (Rural Business Loan) ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய கால கடன்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டும். தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணை சலுகை காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக்கடன்களை வழங்குவதற்கான மாதிரி ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் உரிய அங்கீகாரம் பெற்று கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2026–2027ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.2,000 கோடியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் என மொத்தம் ரூ.5,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கடன் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கவும், கடன் தகுதியை சரிபார்த்து உரிய விதிமுறைகளை பின்பற்றவும், கடன் திருப்பி செலுத்துதல் மற்றும் வசூல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகள், தங்களது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.