சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி , சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலை அருகே சி.பா.ஆதித்தனார் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சி.பா. ஆதித்தனாரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், உருவச்சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிபுத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சி.பா.ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






