கருணாநிதி பிறந்தநாளில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு, எஸ்.வேதாந்தம்-ஆர்.ஆர்.கோபால்ஜி கோரிக்கை

கருணாநிதி பிறந்தநாளில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எஸ்.வேதாந்தம்-ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாளில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு, எஸ்.வேதாந்தம்-ஆர்.ஆர்.கோபால்ஜி கோரிக்கை
Published on

சென்னை,

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ்.வேதாந்தம், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலருமான ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், மேளம் வாசிப்பவர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், ஸ்ரீபாதம் தாங்குபவர்கள், பூக்கட்டுபவர்களும், கிராம கோவில் பூசாரிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையும், மளிகைப் பொருள் தொகுப்பும் வழங்க வேண்டும்.

இதையேற்று கோவில்களில் மாதச்சம்பளம் பெறாத ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேவேளை, இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை போதுமானதாக இல்லை. எனவே உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.

கிராம கோவில்பூசாரிகளுக்கு...

தமிழகத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தேவதை, எல்லைச்சாமி, காவல்தெய்வம், பெண் தெய்வங்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்கள் 2 லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் அதே கிராமத்தில் வசிக்கும், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த 2 லட்சம் பூசாரிகள் பாரம்பரியமாக பூஜைகளை செய்து வருகின்றனர். அவர்களும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராம கோவில் பூசாரிகளை ஒருங்கிணைத்து, ஆலய வழிபாட்டு நெறிமுறைகள் குறித்து கட்டணமில்லா பயிற்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். கிராம கோவில் பூசாரிகள் நலன் காக்க 9 கோரிக்கைகளுடன் 2001-ம் ஆண்டு மதுரையில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு 9-ல் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.

ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

கொரோனா தொற்று முதல் அலையின்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட கிராம கோவில் பூசாரிகளுக்கு அ.தி.மு.க. அரசு தலா ரூ.1,000 வீதம் 2 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கியது. வருமான உச்சவரம்பு குறைவாக இருந்த காரணத்தால் அதிக பூசாரிகள் பலனடைய முடியாத நிலையில், வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

எனவே தமிழக அரசு, பூசாரிகள் நல சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு உதவ வேண்டும். அத்துடன், ஏற்கனவே பதிவு பெற்ற பூசாரிகளின் பதிவு, அடையாள அட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல், கோவில்கள் மூடப்பட்டுள்ள காலத்தை கணக்கிட்டு, முன்தேதியிட்டு, பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாதம் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை மற்றும் அரிசி, மளிகைப்பொருள் தொகுப்பை வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பணியில் இருக்கும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) மூலம், அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பூசாரிகள் விவரங்களை திரட்டி, அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

இந்த உதவித்தொகையை, பூசாரிகள் நல வாரியம் தொடங்கிய கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி (நாளை) வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com