

சென்னை,
பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் சென்னைக்கு வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காததால் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவருடன் தங்கியிருந்தார்.
தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தங்கியிருந்தபோது சிக்கந்தர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதில் நடந்த மோதலில் கவுரவ் குமாரும் அவருடைய மனைவியும், 2 வயது ஆண் குழந்தையும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
3 பேரின் உடல்களையும் சாக்குமூட்டையில் கட்டி, தனித்தனி இடங்களில் வீசிவிட்டனர். கவுரவ் குமாரின் உடல் அடையாறு இந்திரா நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் தரமணி மத்திய கைலாஷ் ரெயில் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாக்குள் இருந்து மீட்கப்பட்டது.
கவுரவ் குமார் மனைவியின் உடல் பெருங்குடி குப்பைமேட்டில் வீசப்பட்டது. குப்பைமேட்டில் பெண்ணின் உடலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். உடல் இன்னும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சிக்கந்தரும் அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் சென்னை நகரையே உலுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.