பாம்பன் புதிய பாலத்தில் இன்றும், நாளையும் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்றும், நாளையும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார்.
பாம்பன் புதிய பாலத்தில் இன்றும், நாளையும் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
Published on

ராமேசுவரம்,

1914ம் ஆண்டு பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இது ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டது. பழமையான இந்த பாலம் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்தது. ரெயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாம்பன் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

தற்போது பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த பாலத்தின் மையப் பகுதியில் சுமார் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பாலத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருலிருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம். சவுத்ரி இன்று பாம்பன் வருகிறார். இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இருந்தபடி முழுமையாக ஆய்வு செய்கிறார். அப்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் வரையிலும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் அதிவேகத்தில் ரெயில் இயக்கியும் சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் ரோடு பால உயரத்திற்கு புதிய தூக்குப்பாலத்தை திறந்து மூடியும் சோதனை நடைபெற இருக்கிறது.

இன்றும், நாளையும் 2 நாட்கள் புதிய பாலத்தை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய இருக்கிறார். இவரது ஆய்வுக்கு பின்னர் புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com