

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளருக்கு ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் இதுபோன்ற வக்கிரபுத்தி கொண்டவர்களின் தொல்லையால் வெளியில் சொல்ல முடியாத வேதனையில் தவிப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்குகிறது.
மேலும் பெண்கள் தங்களுக்கு நேரும் துன்பங்களை வெளியில் சொன்னால் இடமாற்றம் செய்வது, மிரட்டுவது அல்லது பணியில் இருந்து நீக்குவது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதும் கடும் கண்டனத்திற்குரியது. பெண்களின் பாதுகாப்பிற்காக பெருமையாக அறிவிக்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை இதுபோன்ற சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தவெக அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
பகலிலேயே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு நள்ளிரவு நேரப் பணிகளை ஒதுக்குவது அவர்களின் பாதுகாப்பை மேலும் ஆபத்திற்குள் தள்ளுகிறது. எனவே, பெண் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணிநேரங்களை தமிழக அரசு உடனடியாக மாற்றியமைத்தும், மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.