கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு; தலைவர்கள் கண்டனம்

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு தொடர்பாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு; தலைவர்கள் கண்டனம்
Published on

கோவை

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றி சென்றுள்ளனர். இதனை காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசா தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர். இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு வந்த மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் தெற்கு உதவி ஆணையர் செட்டிக் மனுவேல் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சுந்தராபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் வெளியிட்டு உள்ள கண்டன டுவிட்டில்

என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.

அதனால் அவர் பெரியார்!

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! என கூறி உள்ளார்

பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி பெயிண்ட் ஊற்றி சென்ற சம்பவத்திற்கு சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதில் தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை

பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com