சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மரணம் தமிழக அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மரணம் அடைந்தார். அவரது உடல் தமிழக அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மரணம் தமிழக அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (வயது 98). புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் வசித்து வந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ரா. வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.

அவரது உடல், சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) தகனம் செய்யப்படுகிறது. கி.ரா.வின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம்-லட்சுமி அம்மாள் தம்பதியரின் 5-வது பிள்ளையாக 1923-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி பிறந்தவர் கி.ரா. 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் பிற்காலத்தில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிய பெருமை படைத்தவர்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை, வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர், தலைசிறந்த கதைசொல்லி என்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணனின் முதல் கதை 1958-ல் சரஸ்வதி என்னும் இதழில் வெளியானது. பிற்காலத்தில், ஏராளமான கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கிராமியக்கதைகளை எழுதி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.

கரிசல் வட்டார அகராதி' என்று வட்டார தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியான இவரின் படைப்புகள் பெரும்பாலும் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், துன்பங்களையும் விவரிப்பவையாகவே இருந்தன. இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக அவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

மேலும், இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை சிறப்பு விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், 1998 முதல் 2002 வரை சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கதைகள் நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்ற படைப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. கிடை என்ற இவரது குறுநாவல் ஒருத்தி என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கோமதி, கண்ணீர், கரிசல் கதைகள், கி.ரா.பக்கங்கள், கிராமியக்கதைகள், கொத்தைபருத்தி, புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள், கோபல்ல கிராமம், புதுமைப் பித்தன், மாமலை ஜீவா ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாரயணனின் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில், கி.ரா. வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று. அவரது மறைவால் இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது. அவர் மறைவுக்கு அரசு மரியாதை அறிவித்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அரசு அவருக்கு எதிர்காலத்தில் நினைவுமண்டபம் எழுப்பும் என்று நம்புகிறோம். கி.ரா தமிழில் வாழ்வார் என்று தெரிவித்து உள்ளார்.

கி.ராஜநாராயணனின் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வைகைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கி.ரா. மரணம் பற்றி தெரியவந்ததும் கி.ரா.வின் உடலுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம் கி.ராஜநாராயணன் வாழ்ந்த வீட்டை நினைவு நூலகமாக மாற்ற வேண்டும் என்று எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று கவர்னர் தெரிவித்தார்.

இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com