

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசு பள்ளிகளில் மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் வந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. சம்பளத்தைகூட உரிய நேரத்தில் வழங்க முடியாத திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் 'அட்ஜெஸ்ட்' செய்து கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. இதுபோல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
பள்ளி கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.