தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எம்.எல்.ஏ.க்களுக்கு பல சலுகைகளும் உள்ளன.
தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள், மாநில சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம், பல்வேறு படித் தொகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. மக்களின் தேவை அறிந்து சேவை செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் களம் இறங்கி இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், எம்.பி.க்களுக்கான ஊதியம் மற்றும் படித்தொகை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் மற்றும் படித்தொகை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது.

சம்பளம் எவ்வளவு?

அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ரூ.25 ஆயிரமாக இருந்த எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே (2009) ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், 2011-ம் ஆண்டு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டது.

விதிகளில் திருத்தம்

இந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிரடியாக உயர்த்தினார். அதுதான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் தொடர்பான விதிகள், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி திருத்தப்பட்டது. இந்த விதிகளின்படி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.30 ஆயிரம்தான். இதுபோக, படித்தொகைகள் மற்றும் கூடுதலாக சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதைப் பொறுத்து மாத ஊதியம் மாறுபடும்.

முதல்-அமைச்சருக்கு சம்பளம் இவ்வளவா?

முதல்-அமைச்சரின் மாத சம்பளம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் ஆகும். இதுபோக, அரசு வீடு, கார், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். இதேபோல், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஆகும். அதே நேரத்தில், அமைச்சர்களுக்கு அரசு வீடு, கார் கூடுதலாக வழங்கப்படும்.

மேலும், மாத சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில், மாதாந்திரப் படி ரூ.10 ஆயிரம், தொகுதிப்படி ரூ.25 ஆயிரம், அஞ்சல்படி ரூ.2,500, தொலைபேசிப்படி ரூ.7,500, தொகுப்புப்படி ரூ.5 ஆயிரம், வாகனப்படி ரூ.25 ஆயிரம் ஆகியவை உள்ளடக்கம்.

சலுகைகளும் ஏராளம்

இவை தவிர, எம்.எல்.ஏ.க்களுக்கு பல சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் இலவச மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கு விமானம், ரெயில், பஸ் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கான ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம். தேவைப்பட்டால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்தலாம். அதற்கான சம்பளத்தையும் எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக வழங்கப்படும்.

இதுதவிர, சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு என தினசரி படியாக தலா ரூ.2,500 வரை தனியாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com