

சென்னை,
தீபாவளியை முன்னிட்டு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனையை அமைச்சர் காந்திராஜ் நாளை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் சார்பில் “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் 05.11.2026 (வியாழக்கிழமை) முதல் 07.11.2026 (சனிக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படும். மேலும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படும்.
இந்த தொகுப்பில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் மொத்த எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை இருக்கும். இதன் விலை ரூ.100 ஆகும்.
இத்திட்டத்தில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு தொகுப்பாக வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய மற்றும் தரமான காய்கறிகள் வெளிச்சந்தை விலையைவிடக் குறைவான விலையில் கிடைக்கும்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் நாளை சென்னையில் செயல்படும் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை 15 வது மெயின்ரோடு விற்பனை நிலையத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார்கள்.
அனைத்துப் பொதுமக்களும் பயன்பெறும் வகையில், விற்பனை நிலையங்களின் வழக்கமான வேலை நேரங்களில் இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்படும். அதிகமான பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். இத்தொகுப்புகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை சீராக நடைபெறுவதற்குத் தேவையான அறிவுரைகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.