ஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை

சங்கராபுரம் அருகே ஆடிதள்ளுபடியில் ஒரு லிட்டர் வாங்கினால் ½ லிட்டர் சாராயம் இலவசமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப்பகுதியில் சாராயம் காய்ச்சி பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சமூக விரோதிகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராம குடியிருப்பு பகுதியில் ஆடி தள்ளுபடியில் ஜவுளிகள் விற்பனை செய்வது போல்சட்டத்தை மீறி சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

நடவடிக்கை

குடிபிரியர்களை கவரும் வகையில் ஒரு லிட்டர் சாராயம் வாங்கினால் லிட்டர் சாராயம் இலவசம் என்கிற அதிரடி சலுகையை சாராய வியாபாரி அறிவித்துள்ளார். இதையறிந்த குடிபிரியர்கள் ஆர்வத்துடன் வாட்டர் கேன்கள் மற்றும் பாலித்தீன் பைகளில் சாராயத்தை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். போதை பொருட்களை ஒழிக்க ஒரு பக்கம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் மற்றொரு பக்கத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே ஆடி தள்ளுபடியில் சாராயம் விற்பனை செய்யப்படும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com