ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

இதற்கான முதல் விற்பனையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜன் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டி.டி.கே. சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (03.09.2026) தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 03.09.26 முதல் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com