கே.கே.நகர், தென்னூர் உழவர் சந்தை உள்பட 4 இடங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

கே.கே.நகர், தென்னூர் உழவர் சந்தை உள்பட 4 இடங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. ½ மணி நேரத்திற்குள் அனைத்தும் விற்று தீர்ந்தது.
கே.கே.நகர், தென்னூர் உழவர் சந்தை உள்பட 4 இடங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
Published on

தக்காளி விலை உயர்வு

நாடு முழுவதும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 50 டன் முதல் 60 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தற்போது, விளைச்சல் குறைந்ததால் 15 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று மொத்த விற்பனையில் ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.2,200 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக காந்தி மார்க்கெட், உழவர்சந்தையில் சில்லறையில் தரமான தக்காளி கிலோ ரூ.120-க்கும், இரண்டாம் தர தக்காளி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மலிவு விலை

இந்தநிலையில் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி, திருச்சி மாநகரில் தோட்டக்கலைத்துறை சார்பில் கே.கே.நகர், தென்னூரில் உள்ள உழவர் சந்தை, திருவானைக்காவல் டிரங்க்ரோட்டில் உள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையம் மற்றும் மன்னார்புரத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது.

6 டன் விற்பனை

கே.கே.நகர் உழவர் சந்தையில் இந்த விற்பனையை கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் விமலா, வேளாண் வணிகம் துணை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று 4 இடங்களிலும் மொத்தம் 6 டன் தக்காளி ஒரு கிலோ ரூ.80 வீதம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது. தக்காளி விற்பனை தொடங்கிய மணி நேரத்திற்குள் அனைத்து தக்காளியும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்சி மாநகரில் 20 ரேஷன் கடைகளில் மொத்தம் 575 கிலோ தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அவற்றை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை

தக்காளி விலை உயர்வால் காந்தி மார்க்கெட்டில் முன்பு ஒரு கிலோ தக்காளி வாங்கிய பொதுமக்கள் தற்போது கிலோவுக்கு மாறிவிட்டனர். மேலும் ஓட்டல் மற்றும் விடுதி நடத்துபவர்களும் தக்காளி வாங்குவதை குறைத்து விட்டனர். இதனால் தக்காளி விற்பனையாகாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் கலீலுல் ரகுமான் கூறியதாவது:-

தக்காளி வரத்து மிகவும் குறைந்து விட்டதே விலை உயர்வுக்கு காரணம். விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் தக்காளியை வாங்குவதை குறைத்துவிட்டனர். வழக்கமாக மொத்த வியாபாரிகளிடம் தக்காளி இருப்பு இருக்காது. தற்போது வியாபாரிகள் வாங்காததால் இருப்பு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பல நேரங்களில் வாங்கிய விலைக்கே விற்க வேண்டிய நிலை உள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு கவலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com