

சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் சத்யா நகரை சேர்ந்தவர் பழனிவேல் (47). லாரி டிரைவரான இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களது மகள் தனஸ்ரீ (16).
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பழனிவேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வடுகப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்ட செல்லம்மாள், சங்ககிரி பஸ் நிலையம் அருகே உள்ள தனது தோழி அமுதா வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு அங்கு சென்ற பழனிவேல், மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டின் வாசலில் மகளின் தங்க தோடு ஒன்று கிடந்தது.
இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிவேல் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.