

சேலம்,
சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில், சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் நைசாகப் பேசி 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அம்சவல்லி (வயது 70). இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியிடம் ஏதோ கேட்பது போல நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.
அவர் பேசியது சரியாக கேட்காததால் மூதாட்டி அருகே சென்றபோது, அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பலவந்தமாகப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த திடீர் தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி அம்சவல்லிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துணிகரச் செயின் பறிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இன்று (புதன்கிழமை) காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இக்காட்சிகளின் அடிப்படையில் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தப்பியோடிய ஹெல்மெட் கொள்ளையனை விரைந்து பிடிக்க போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் போலீஸ் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.