

சேலம்,
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் நேற்று இரவு கட்சி அலுவகத்தில் இருந்து வீடு திரும்பியபோது மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த படுகொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;
"தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
தெரு விளக்குகளை துண்டித்தும், சிசிடிவி கேமராக்களை உடைத்தும் திட்டமிட்டு கொடூர முறையில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது. சண்முகத்தை இழந்துவாடும் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.