புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி

சேலம் மாவட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கு தரமானதாகவும், தனி சுவை கொண்டதாகவும் இருக்கும்.
புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி
Published on: 

சேலம்,

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கு தரமானதாகவும், தனி சுவை கொண்டதாகவும் இருப்பதால் அதில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு கடந்த 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. சேலம் மாமாங்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் சேகோ சர்வ் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் சார்பில் மரவள்ளிக்கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி குஜராத், மராட்டியம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கலப்படம் இல்லாமல் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவதால் உலக அளவில் சேலம் ஜவ்வரிசிக்கு தனி மவுசு இருந்து வருகிறது. இந்தநிலையில், சேலம் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு வின் சார்பில் முதன் முறையாக ஐரோப்பா நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர் லாந்து, நார்வே, டென்மார்க், இத்தாலி, ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் சேலம் ஜவ்வரி சியை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜவ்வரிசி தயாரிப்பாளர்களுக்கு அதிக வணிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், நாட் டின் ஜவ்வரிசி உற்பத்தியில் 80 சதவீதம் சேலம் மாவட்டம் தான் பங்களிக்கிறது. ஜவ்வரிசியில் இருந்து பாயாசம், உப்புமா, வடகம் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் உணவு பொருட் களில் ஜவ்வரிசியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுவரை குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த சேலம் ஜவ்வரிசியை தற்போது ஐரோப்பா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஜவ்வரிசி மட்டுமின்றி கிரானைட், பருத்தி துணிகள், வெள்ளிக்கொலுசு உள்பட பல்வேறு வகையான பொருட்களும் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com